லைட்ஸ் ஆஃப்!







ராமசாமி நாடாரைத் தெரியாதவர்கள் வடசேரி சந்தையில் வெகு சொற்பம் பாக்குக் கொட்டை வியாபாரத்தில் பழமில்லாமலே கொட்டை எடுத்தவர். மார்த்தாண்டம் சந்தையிலிருந்து தோவாளை வரைக்கும் கடைகளுக்கு வட்டிக்குக் கொடுத்திருப்பவர்.

வடசேரி காய்கறிக் கடைகளுக்கு நடுவே அழுக்கப்பின மண்டியில் இருபது சாக்கு பாக்குப்பைகளை விரித்து வைத்திருப்பார்கள்.
கரும்பாக்கு விலைகுறைச்சல். கொஞ்சம் பழுப்பும் மங்சளுமாய் இருக்கும் பாக்குக் கொட்டையில் மட்டுமே ஈக்கள் உட்கார யோசிக்கும்.

 வெள்ளை வெளேர் சட்டையில் ராமசாமி நாடார் தலையில் துண்டும் நெற்றியில் அய்யாவழி நாமமும் இட்டபடி கணக்கு வழக்குகள் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.

அப்பாவோடு சந்தைக்குப் போகும் போதெல்லாம் பல்லாரியைக் கீழே சிதறவிடுபவர்களுக்கு உதவியாக கைகள் நிரம்பிய ஒற்றை பல்லாரியை எடுத்துக் கொடுக்கப் பார்ப்பேன். எட்டுவயதிருக்கும் எனக்கு. திங்கள்நகர் சந்தையில் பணம் பட்டுவாடா முடித்து எஸ்.கே.பி . பஸ்ஸில் வடசேரி முனையில் இறங்கி சந்தைக்குள் நுழைவர்.

சந்தையில் அப்பாவுக்கு நல்ல அறிமுகம் இருந்தது சந்தை மனிதர்களோடு. கூடவே ராமசாமி நாடாரிடமும். தொழில்விருத்திக்காக கடன்வாங்கி இருந்திருப்பார் போல.. அப்பாவுக்கு மார்த்தாண்டத்தில் ஓட்டல் வியாபாரம்.

ஓட்டல் கண்ணாடிப் பேட்டிக்குள் நேந்திரம் பஜ்ஜி, சுழியன்,அடுக்குவது என் வேலையாக இருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில். முழு நேர்திரம் பழத்தை அரைவாகாய் கீறி இடைச்சொறுகலாக செவ்வரிசி அவல் சீனிப்பகு வைத்து, மஞ்சள் மாவில் அமிழ்த்தி எண்ணையில் பொரித்தெடுக்கும் பழபஜ்ஜி சுவைக்கு நாஞ்சில் நாடே அடிமை.

வாரநாட்களில் ஓட்டலுக்குத் தேவையான மளிகை காய்கறிகள் பழங்கள் வீட்டுக்கே வந்துவிடும். வார இறுதியில் சந்தைக்காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அப்பா வரும் போதுதான்  எப்போதாவது என்னையும் கூட்டி வருவார்.

அப்போது தான் ராமசாமி நாடார் கடையில் உட்கார்ந்திருக்கும் அவரை  மேசை உயரத்திலிருந்து எக்கி எக்கிப் பார்த்திருக்கின்றேன்.
வஜ்ர தேகம், வார்த்தைகளில் அசல் நாகர்கோவில்காரர்களின் இழுவையும் கறாரான பேச்சும். இருக்கும்.

“ செவத்தையாபுரம் தர்மலிங்க நாடார் கணக்கு நோட்டை எங்கிட்டு வச்சீக.. சாமித்தோப்பு குடக்கூலில்லாம் வெரசா வருதா! நாசரேத்துக்கு சாங்காலத்துக்குள்ள சரக்கை அனுப்பி வையும். நல்ல படுதாவ இழுத்து கட்டச் சொல்லிறும். மழையடிக்கும் போலட்ருக்கு” -இராமசாமி நாடார்.

அசப்பில் பாலகங்காதர திலகரையும், மொழிஞாயிறு பாவணாரையும் சேர்த்துப் பிணைந்தது போல் மீசைவைத்திருப்பார். அய்யாவழி கோவில்களுக்குப் பெருங்கொடை கொடுத்தவர்.

 இந்து கிறிஸ்தவ சமயங்களாக பிரிந்து போனபோதும் அந்த இனத்துக்கான இடைவெளியை வியாபார/வர்த்தகத் தொடர்புகளால் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களில் நாடாரும் ஒருவர்.

நான்கு மகன்கள் மூன்று புதல்விகளுமாக மொத்தம் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர். ஆளாளுக்கு ஒரு தொழில் என இன்னமும் காவல்கிணறு முதல் களியக்காவிளைவரைக்கும் கொடிகட்டிப் பறக்கும் வர்த்தகர்கள். ஆனால்?

அவருடைய நான்காம் புதல்வர் ஜீவன் கிஷோர் பெயர் கொடி கட்டிப் பறக்கவில்லை கண்ணீர் அஞ்சலியில் நனைந்தது. எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கின்றதல்லவா! கேள்விப்பட்டிருப்பீர்கள்!

 சென்னையில்உதவி இயக்குனர் ஒருவர் பேரூந்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று! அதே பெயர் தான் இவருக்கும். இல்லை அப்படிச் சொல்லி சமாளித்துவிட முடியாது! இருவரும் ஒருவரே என்னும் உண்மையை நான் மறைத்துவிடவும் முடியாது!

கிஷோருக்கு இயக்குனர் ஆகும் கனவுகள் முளைக்கத் துவங்கியது பதினெட்டாவது வயதில்! கார்த்திகை தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்த்துக்கிடந்தவன். நாகர்கோவில் எக்ஸ்ப்ரஸைப் பிடித்து சென்னை வந்து, மெரினாவில் மயக்கமாய் உறங்கி,  அதிமேதாவி இயக்குனர் ஒருவர் வீட்டுக்கு இரவுபகல் காவலாளியாக வேலைபார்த்து,  அம்பட்டன் தெருவில் மொட்டைமாடி சந்தில் கற்பனைகள் தின்று காகிதங்கள் குடித்து கதைகள் எழுதி ஒவ்வொரு தயாரிப்பாளர் அலுவலகத்தின் வாசலிலும் கார்துடைத்து, மது, மாவா,பான், மயி , மட்டை என எல்லாம் வாங்கிக் கொடுத்து , எடுபிடி வேலைபார்த்து, கதைவிவாதங்களில் கலந்துகொண்டு,தேனீர்க்கடையில் கடன் சொல்லி, கையேந்தி உணவினால் எடையிழந்து,

ஒருநாள் சக அறை நண்பனின் துரோகத்தில் தான் கருவாய்ச் சுமந்த கதையினை இழந்து, மிச்சமாய் இருந்த தன்னம்பிக்கையினை மட்டும் தேக்கி வைத்து உயிர்க் கூட்டை கஞ்சாவின் புகைக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டவன்.

வாழ்வு அவனுக்கு பெரும் சவாலாய் இருக்கவில்லை. கடினங்களின் போதும் வைராக்கியத்தை வைத்துச் சமாளித்துக் கொண்டான்,  அடையாளங்களுக்காய் புறக்கணிப்புகளின் சூட்டை முதுகில் ஏந்திக் கொண்டான். எத்தனையோ தோற்றுப் போனவர்களின் கதைகளை, அவர்கள் தட்டியும் திறக்காத கதவுகளை எல்லாம் கதைகள் செய்து வைத்திருந்தான்.

தான் எழுதிக் கொடுத்த பத்து காட்சிகளும் அப்படியே அச்சுப் பிசகாமல் இரெண்டெழுத்துப் பட இயக்குனரின் அடுத்த படத்தில் இடம்பெற்றதைக் கூட அவன் பொருட்டாய் எடுக்கவில்லை, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உள்ளுக்குள் கதறினவன் ஓலம் உடனிருந்த யாருக்கும் கேட்டிருக்கவில்லை.

ஒரு புலியின் வேட்டை இரைபோல  சினிமா அவனைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அவன் உயிர் வடிந்து கொண்டிருந்ததை யாருக்கும் அவன் சொல்லவே இல்லை.

தங்கைகள் ஒருவரின் திருமணத்திற்கும் ஊருக்குப் போகாதவன். அம்மாவுக்கு மட்டும் எப்போதாவது கடிதம் எழுதுவான்,. அது அம்பட்டன் தெரு அறை வாசலைக் கூட கடந்திருக்காது.

மெட்ராஸ் ப்ரொடக்சன் தயாரிப்பாளரிடம் கதைசொல்லப் போயிருந்தான். அறைக்குள் என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியாது. போதை மிகுந்த பெரும் மழை  நாளான அன்று  அரும்பாக்கம் பேரூந்திலிருந்தபடி,   தன்னுடன் இருந்த உதவி இயக்குனனிடம் தன் கதையில் வரும் இறுதிக் காட்சியொன்றை விவரித்து வந்தவன்....அப்படியே நடித்துக் காட்டுவதாக  வேகமாக இறங்கி பின்னால் வந்த பேரூந்துக்குள் பாய்ந்து மாய்ந்து போயிருக்கிறான்.

எத்தனை வலிமிக்கதான தருணம் அது என்பதை வார்த்தைகளால் உணர்த்தமுடியவில்லை என்னால்.  வாழ்வு நிறைய கற்றுக் கொடுத்திருக்கின்றது. ஜீவன் வெறும் மூன்றங்குல நாளிதழ் செய்தியாகிப் போனான். நாளிதழ் செய்திகள் தாங்கி இருக்கும் கொடூரத்தின் வதையை  நீங்கள் அறியவேண்டுமெனில் உயிரைவிட்டவன் குடும்பத்தை ஓரிருவினாடி நினைத்துப் பார்த்தாலே போதும்.

நான்கு வருடங்களுக்குப் பின்...,
*********************************************

இன்றைக்கு ராமசாமி நாடார் உயிருடன் இல்லை. பழைய பிரேம் போட்ட கண்ணாடிக்குள் பாக்குக் கொட்டை மண்டியில் தலைப்பாகையுடன் புன்னகைக்கிறார். உயிரோடு இருக்கும் போது மூன்றாவது மகன் என்ன செய்கிறான் என்ற கேள்விக்கு மெட்ராஸில் இருக்கிறான் என்று பட்டும்படாமலும் பதில் சொல்லியே ஓய்ந்துபோன உதடுகள் உள்ளுக்குள் மருகும் வருத்தத்தை அந்த புன்னகையில் தான் மறைத்து வைத்திருக்கின்றது போல

வடசேரிச் சந்தையில் பாக்குமண்டிக்காரர்கள் அவரவர் வேலையினை பார்த்தபடி இருக்க..   சர்வோதயா ஊதுபத்தியின் புகைக்கு நடுவே ராமசாமி நாடாரின் புகைப்படத்தினை  க்ளோஸப் ஷாட்டுக்கு ஜூம் பார்த்து ப்ரேம் வைத்துப் பார்த்தேன்...மனதுக்குள்

தோற்றுப்போன ஒருவனது கதையினைச் சொல்லும் படத்தில் முதல் காட்சியாக அது இருந்தது.
டேக் ஓகே! லைட்ஸ் ஆஃப்!

-கார்த்திக். புகழேந்தி.
9/25/2014 

Comments

  1. வலிக்கிறது கார்த்தி ....

    ReplyDelete
  2. எத்தனை உதவி இயக்குனர்கள் இப்படி காணாமல் போகின்றார்கள்! அத்தனை பேரையும் நினைக்க வைத்தது பதிவு!

    ReplyDelete
  3. வாழ்வில் தோற்பவர்களைஉலகம் மதிக்காது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil